இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்... எப்படி வந்தது?.. என்ன நடந்தது?
aryabhata satellite
ஆரியபட்டா என்பது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும். இந்தியாவில், வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் நினைவாக முதல் செயற்கைக்கோளுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரித்து, சோவியத் யூனியனின் உதவியுடன், 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதுவே, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
இதன் எடை 360கிகி ஆகும். சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டின் யார் (Kapustin Yar) ஏவுதளத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது.
ஆரியபட்டா பூமியில் இருந்து சுமார் 619 கி.மீ உயரத்தில் பறந்து வந்தது. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைக்கோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக்கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.
ஆரியபட்டா செயற்கைக்கோள், இந்திய வானிலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக, பெங்களுரில் உள்ள இஸ்ரோ மையத்தில் மாற்றம் செய்யப்பட்டு, தரை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
ஆரியபட்டாவின் வெற்றியை நினைவுகூறும் விதமாக, அப்போதைய சோவியத் யூனியன் அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.