Freedom Fighter : அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


வீரமுரசு:

அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர். விடுதலைப் போராட்ட வீரமுரசை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!!

பிறப்பு :

சுப்பிரமணிய சிவா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ராஜம், நாகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

கல்வி :

மதுரையில் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைப் கல்வி வரை பயின்றார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஓராண்டு படித்தார். கொட்டாரக்கரையில் சதானந்த சுவாமிகளை சந்தித்து ராஜயோகம் பயின்றார். பிறகு தமிழகம் திரும்பியவர், சிவகாசியில் காவல்துறை எழுத்தராகச் சேர்ந்து, மறுநாளே விலகினார். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடியவர். கவிதை புனைவதில் வல்லவர். சிறந்த சொற்பொழிவாளர் ஆவார்.

திருமண வாழ்க்கை :

சுப்பிரமணிய சிவா 1899ஆம் ஆண்டு மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

விடுதலை போராட்டத்தில் சுப்பிரமணிய சிவாவின் பங்கு :

சுப்பிரமணிய சிவா 1906ஆம் ஆண்டு முதல் 1907ஆம் ஆண்டு வரை திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார். 

தூத்துக்குடி சென்று வ.உ.சிதம்பரனாரை சந்தித்தார். இருவருக்கும் நட்பு மலர்ந்தது. பாரதியார் தனது சுதேசி கீதங்களால் இவர்களது சுதேச உணர்வை மேலும் தூண்டினார். பாரதியும் சிவாவும் மேடைதோறும் விடுதலைப் போராட்ட முழக்கமிட்டனர்.

சுப்பிரமணிய சிவா சென்னை, கல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1908ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1912ஆம் ஆண்டு விடுதலையாகி, சென்னையில் குடியேறினார்.

'ஞானபானு" என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்" என்ற வார இதழைத் தொடங்கினார். துறவிபோல காவி உடை அணிந்தார். பெயரை 'ஸ்வதந்திரானந்தர்" என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். விடுதலையானதும், சென்னைக்கு வந்தார். உடல்நிலை தேறியதும் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார்.

நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் நிறுவினார். அதற்கு 'பாரதபுரம்" எனப் பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார். 'தேசபந்து" சித்தரஞ்சன்தாஸை அழைத்துவந்து அடிக்கல் நாட்டினார்.

தொழுநோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று கோயிலுக்கு நிதி திரட்டினார். நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் ஏற ஆங்கில அரசு தடை விதித்தது. உடல் முழுவதும் புண்ணாக இருந்தபோதிலும், துணியால் மூடிக்கொண்டு நடந்தும், கட்டை வண்டியிலும் பல ஊர்களுக்குச் சென்றார். சொற்பொழிவாற்றி, நிதி திரட்டினார்.

சுப்பிரமணிய சிவாவின் மறைவு :

பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 1925ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி வந்தடைந்தார். 1925ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தம்முடைய 41வது வயதில் சுப்பிரமணிய சிவா மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Freedom Fighter subramaniya Siva history in Tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->