பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை; வெயிலில் அதிகம் பணியாற்றாதீர்கள்; பொது சுகாதார துறை..!
Dont work in the sun for too long Public Health Department
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப பாதிப்புகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.
தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால், ஏற்படும் விளைவுகளை தடுக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்றும், உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்வது மிக முக்கியம் என்றும் கூறியுள்ளார். அதற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது அதிக நீர் அருந்த வேண்டும். உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோர், இளநீர் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெயில் காலங்களில் இறுக்கமான ஆடைகளை அணியாமல், பருத்தி ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும். குடை, தொப்பி, கையுறை என, வெப்பத்திலிருந்து தற்காக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் காலணி அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும் என்றும், வசிப்பிடங்களில், காற்றோட்டம் இருப்பதை, உறுதி செய்வது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வீட்டில் உள்ள முதியோர், இணை நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோர், குளிர் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில், தற்காத்து கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வெயிலில் தீவிரமாக பணியாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் அதிகம் வெப்பமான நேரங்களில் மது, புகை, தேநீர் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகள், காரமான உணவுகள், எண்ணையில் பொரித்த உணவுகள், சீரிவீட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது என் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியயமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே, குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம், உடல் நலத்தை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வெளி காலங்களில் அதிகம் தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால், மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவசர கால 108 சேவையை அழைக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Dont work in the sun for too long Public Health Department