தமிழகத்தில் பருவமழை தீவிரம்!... இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
Intensified monsoon orange alert for 4 districts in tamil nadu today
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாகை, திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Intensified monsoon orange alert for 4 districts in tamil nadu today