வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை.! 5 நாட்டுத் தலைவர்களுடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை.!
Kamala Harris discuss with heads of 5 countries for north Korea missile test
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் அளவுக்குக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை இன்று வடகொரியா ஏவியுள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை ஹொக்கைடோவுக்கு மேற்கே சுமார் 210 கிமீ (130 மைல்) கடலில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாங்காக் நகரில் நடைபெறும் ஆசியா-பசிபிக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்த் சென்றுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக உடனடியாக ஒரு அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்றும், இது பிராந்தியத்தில் பாதுகாப்பை சீர்குலைத்து, தேவையில்லாமல் பதட்டங்களை எழுப்புகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Kamala Harris discuss with heads of 5 countries for north Korea missile test