கொட்டும் கோடை மழை - காலிபிளவர் விலை குறைவு.!!
cauliflower price decrease for summar rain
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதினா, கேரட், வெண்டை, முட்டை கோஸ், கொத்தமல்லி, தக்காளி, காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதிலும் காலிஃபிளவர் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோடை மழையால் விவசாயிகள் காலிஃபிளவரை அறுவடை செய்து வருகின்றனர். இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் சிலர் தெரிவித்ததாவது:- "சூளகிரி, ராயக்கோட்டை பகுதிகளில் உள்ள நர்சரிகளில் இருந்து காலிஃபிளவர் நாற்றுகளை வாங்கி வந்து சாகுபடி செய்தோம். இதற்காக ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் காலிஃபிளவர், ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களில் கொள்முதல் செய்து வாகனங்கள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள காலிஃபிளவர் மழை நீரால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல விவசாயிகள் அறுவடை செய்து நேரடியாக வாகனங்கள் எடுத்துச் சென்று கிடைக்கும் விலைக்கு தெருக்களில் கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
cauliflower price decrease for summar rain