ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கையின் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு; ஆட்டம் கண்ட மும்பை பங்குசந்தைகள்..!
Stocks fall for 4th day amid fresh US tariff threat
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வரி விதிப்பு அறிவிப்புககளை வெளியிட்டார். குறித்த நடவடிக்கைகளால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால், உலகளாவிய வர்த்தக போர் குறித்த கவலையை அதிகரிக்க செய்துள்ளது.
இதில், இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கி உள்ளதோடு, இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/mar1-gnvwy.jpg)
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பான அச்சுறுத்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்து, வங்கி மற்றும் உலோகம் மற்றும் எண்ணெய் துறை பங்குகளின் விற்பனையை தூண்டியது. அத்துடன், வெளிநாட்டு நிதி வெளியேற்றம், பலவீனமான மூன்றாம் காலாண்டு முடிவுகள் ஆகியவை முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நான்காவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன.
இன்று மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 548.39 புள்ளிகள் சரிந்து 77,311.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகப்பட்சமாக 753.3 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 178.35 சரிந்து 23,381.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
![](https://img.seithipunal.com/media/mar3-dmwbe.jpg)
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் பவர் கிரிட், டாடா ஸ்டீல், சொமாட்டோ, டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகம் பின்தங்கின. அத்துடன், கோடக் மஹிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் அல்லது 1.63 சதவீதம் சரிந்துள்ளது. நிப்டி 357 புள்ளிகள் அல்லது 1.51 சதவீதம் சரிந்துள்ளது. அத்துடன், இன்று மும்பை பங்குச் சந்தையில் 3,032 பங்குகளின் விலை குறைந்ததோடு, 1,070 பங்குகளின் விலை அதிகரித்தன. 123 பங்குகளின் விலை மாறாமல் இருந்தன.
![](https://img.seithipunal.com/media/mar2-dmwbe.jpg)
மேலும், ஆசிய சந்தைகளில் சியோல் சரிவடைந்துள்ளது. டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் முன்னேற்றம் கண்டன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அமெரிக்க சந்தை அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) ரூ.470.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.04 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 75.44 டாலருக்கு விற்பனையாகிறது.
English Summary
Stocks fall for 4th day amid fresh US tariff threat