16 வயதினிலே பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார் - கமல், ராதிகா இரங்கல்!
Film producer SA Rajkannu passes away Kamal, Radhika condole
தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு வயது மூப்பின் காரணமாகவும், உடல்நல பிரச்னையாலுமு் சென்னையில் நேற்று(ஜூலை 11ம் தேதி) காலமானார். இவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா, கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவை அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
கமல் ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த '16 வயதினிலே' படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. மேலும் கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலே, மகாநதி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து ராதிகா வெளியிட்ட இரங்கல் செய்தியில், நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என் திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான நினைவுகளும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல நடிகர் கமல்ஹாசனும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Film producer SA Rajkannu passes away Kamal, Radhika condole