வெற்றியை கொடுக்குமா தமிழக வெற்றி கழகம்? அரசியலில் அதிரடியாக களம் இறங்கினார் விஜய்!!
Thalapathy Vijay TVK Party
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று ஆணையத்தில் தந்து கட்சிக்காக முறையாக பதிவு செய்துள்ளார். 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற மேற்கோள்களுடன் அறிக்கை வெளியிட்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார்.
தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நீண்ட நெருங்கிய தொடர்பு இன்று வரை இருந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர்கள், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் ஆகியோர் திரை துறையில் இருந்து வந்ததே இதற்கு சான்று. ஆனால் சினிமா புகழ் மூலம் அரசியலுக்கு வந்தாலும் மேற்கூறிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஆளுமை மிக்கவர்களாகவும், மக்களின் செல்வாக்கை பெற்றவர்களாகவும் விளங்கினர்.
எம்ஜியாரை பின்பற்றி வந்த சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி , எம்ஜியாரின் வாரிசாக கருதப்பட்ட பாக்கியராஜின் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம், டி.ராஜேந்தரின், இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி என்று இவர்கள் தொடங்கிய கட்சிகள் காலப்போக்கில் லெட்டர் பேடு கட்சிகளாகவே இயங்கி வந்தன.
நடிகர் சரத்குமாரின் சமக கட்சியின் நிலைமையோ சொல்லவே வேண்டாம் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவதே அவருக்கு சவாலாக உள்ளது. டீவியை ரீமோட்டல் உடைத்து ஆக்ரோஷமாக அரசியலுக்கு வந்த கமலின் நிலைமை என்னவென்று சொல்லவே தேவையில்லை. அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எப்ப வருவேன் எப்படி வருவேன்... என்று பன்ச் வசனம் பேசிய ரஜினியோ இனி எப்பவும் வரமாட்டேன் என்று பேக் அடித்துவிட்டார். இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் மக்கள் செல்வாக்குடன் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழகத்தில் போராடி வருகிறது. இதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றது கேப்டன் விஜயகாந்தின் தேமுதிகதான்.
இந்நிலையில், நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் தான் இப்போது பேசு பொருளாக உள்ளது. தனது மகனை எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்பதுதான் எஸ்ஏசியின் வாழ் நாள் லட்சியமாக இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி, நடிகர் விஜய் பெயரில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை ஆரம்பிக்க, இது பிடிக்காமல் விஜய் தன் தந்தையுடன் கோர்ட், கேஸ் என்று மல்லுக்கட்டியது தனிக்கதை.
ஆடியோ லாஞ்சின் போது மட்டும் ரசிகர்களை குட்டிக்கதை சொல்லி உசுப்பேத்திவிட்டு சைலன்ட் மோடிற்கு சென்று விடும் விஜய், இப்போதெல்லாம் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து வருவதுடன் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட, கல்வி விருது வழங்கும் விழாவில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பரிசளித்தார். அதோடு, தென் மாவட்டங்களில் மிக கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் 2026 தேர்தலுக்கு விஜய் தயாராகிவிட்டதாகவே கருதுகின்றனர்.
ஆனால் இது மட்டும் அரசியலுக்கு போதுமா? பிரச்னை என்று வந்தால் விஜய் எப்படி என்று கடந்த காலத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால் எந்த ஒரு பிரச்சனையையும் இவர் உறுதியாக எதிர்த்து நின்றதாக தெரியவில்லை. தலைவா படத்தில் 'டைம் டு லீட் ' என்று படத்தில் டைட்டில் டேக் லைன் வைத்ததற்காக, ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய், படத்தை திரையரங்கில் ஓட வைப்பதற்காக கொடநாடு வரை தந்தையுடன் சென்றார். ஆனால் ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஏன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கூட இவர் தீர்க்கமாக எதிர்த்ததில்லை. மெர்சல் படத்தை பிஜேபி எதிர்த்த போது ஜோசப் விஜய் என்று பெயருடன் ஒரு அறிக்கை மட்டும் விட்டு விட்டு சைலண்டாகிவிட்டார்.
இவர் வீட்டில் ரைட் வரும் போது ரசிகர்களை வைத்து செல்பி எடுத்து பயமற்றவர் போல் கட்டிக்கொண்டார். அப்போது வருமான வரித்துறையினர் விசாரணைக்காக தங்களது இன்னோவா காரில் ஏற்றி சென்னை அழைத்து வந்தனர் அப்போதும் இவர் மத்திய அரசுக்கு எதிர்வினையாற்றவில்லை. .
இப்படி மெண்மையாக அரசியலை அணுகும் விஜய், எப்படி கொள்கை பிடிப்புடன் சித்தாந்தத்துடனும், அரசியல் களமாடும் திமுக, அதிமுக பாமக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் போன்ற காட்சிகளை எதிர்கொள்வர் என்ற கேள்வியும் மக்களிடமும் அரசியல் விமர்சகர்களிடமும் எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் தான் தொடங்கியிருக்கும் கட்சியின் இன்று பெயரை அறிவித்திருக்கிறார். இதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசியலில் தான் ஒரு எம்ஜியாரா அல்லது சிவாஜியா என்பதை விஜய் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளும், அவரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும்.
English Summary
Thalapathy Vijay TVK Party