பழம்பெரும் நடிகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் நினைவு தினம்!.
Veteran actor T.R.Mahalingam death anniversary
பழம்பெரும் நடிகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் நினைவு தினம்!.
டி. ஆர். மகாலிங்கம் (சூன் 16, 1924 - ஏப்ரல் 21, 1978). 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார்.

அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
English Summary
Veteran actor T.R.Mahalingam death anniversary