தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு.! 58 வயதுக்கு மேல் எத்தனை பேர் தெரியுமா?!
TNGovt Employment Job
தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் அரிதாகி கொண்டே செல்கிறது.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள்., வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு, அரசு வேலை எட்டாக்கனியாக பலருக்கும் மாறியுள்ளது. அதே சமயத்தில் பொறியியல் படித்துவிட்டு பீட்சா டெலிவரி செய்யும் வேலைக்கு செல்பவர்களும், ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்துவிட்டு கட்டிட தொழில், கட்டிட கூலி வேலைக்கு செல்பவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதில், தமிழகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 17.81 லட்சம் பேர், 19 வயது முதல் 23 வயது வரை 16.14 லட்சம் பேர், 24 வயது முதல் 35 வயது வரை 28.60 லட்சம் பேர், 58 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதில் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் காத்திருப்பதாகவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் தமிழக அரசு அறிவிப்பு தெரிவித்துள்ளது.