இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்துக்கு அனுமதி! அதிகாரப்பூர்வமாக "மவுஞ்சாரோ" அறிமுகம்!
India weight loss Drugs
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை தொடர்ந்து, இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதை தயாரித்த Eli Lilly நிறுவனம், இதை மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய இந்த மருந்து, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்காக, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஏற்கனவே மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்தியாவிலும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து, உணவுக்கான ஆர்வத்தை கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது. இருப்பினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெறாமல் இதை சுயமாக பயன்படுத்தக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் நீரிழிவு நோயும் உடல் பருமனும் அதிகரித்து வரும் நிலையில், மவுஞ்சாரோ மருந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.