ஆந்திராவில் 200 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை.....இதுவரை 9 பேர் பலி!
200 years of unprecedented rains in Andhra Pradesh 9 people have died so far
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மேக்னா(25), பொலம் லட்சுமி(49), புர்காதி லாலு(38) மற்றும் ஜம்பனா அன்னபூர்ணா(55) ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதே பகுதியில் அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூரில் தனது மாணவர்கள் இரண்டு பேருடன் காரில் சென்ற ஆசிரியர் ராகவேந்திரா மற்றும் மாணவர்கள் சவுதிஷ்(6) மற்றும் மன்வித்(9) ஆகியோர் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது, மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் மங்கலகிரியில் உள்ள கண்டாலயப்பேட்டா கிராமத்தில் நிலச்சரிவால் வீடுகள் மீது கற்பாறைகள் விழுந்ததில் 68 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்புப் பணிகளுக்காக அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
200 years of unprecedented rains in Andhra Pradesh 9 people have died so far