33 பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவு - காரணம் என்ன?
33 chools close in puthuchery
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத 33 பள்ளிகளை மூட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கு கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
"புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சட்டத்துக்கு முரணானது. முதல்கட்டமாக 33 அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி கல்வித்துறை உத்தரவிட்டது.
இங்கு குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டனர். 2-ம் கட்டமாக 33 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். எதிர்காலத்தில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம், பெற்றோர்களே முழு பொறுப்பு.
இதனால் பள்ளிக்கு அங்கீகாரம் உள்ளதா? என்று பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளை நடத்துவது பள்ளிக்கல்வி சட்டம் பள்ளிக்கல்வி விதிகளை மீறுவதாகும். குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
33 chools close in puthuchery