நாளை உருவாகிறது ’அஸ்னா' புயல் - இந்திய வானிலை மையம் தகவல்!
Asna Cyclone
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கட்ச் மற்றும் அதனை ஒட்டிய செளராஷ்ட்ரா பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரமாக மெதுவாக நகர்ந்து வருகிறது.
குஜராத்தின் வடக்கு - வடமேற்கு திசையில் 60 கி.மீ. தொலைவில், தற்போது மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
நாளை காலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அரபிக்கடலை அடைந்து, வடகிழக்கு பகுதியில் புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கணிப்பு கணித்துள்ளது
அடுத்த 2 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும்.
இது புயலாக உருவெடுத்தால், சுழற்சி முறையில் பாகிஸ்தான் நாடு பரிந்துரைத்த ’அஸ்னா' என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்படும்.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மதியம் பகல் ஒரு மணி வரை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.