4 மாநிலம், 49 மாவட்டங்களை தனியாக பிரித்து புதிய மாநிலம்! பிரமாண்ட பேரணி!
Bhil State Request
ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இருந்து, 49 மாவட்டங்களை தனியாக பிரித்து, புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களான பில் சமூகத்தினர், தங்களுக்கென்று தனி மாநில கோரிக்கையை வெகு நாட்களாக வைத்து வருகின்றனர்.
குறிப்பாக மிகப்பெரிய பழங்குடி அமைப்பான ஆதிவாசி பரிவார் உள்ளிட்ட 35 அமைப்புகள் இன்று மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேரணியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 12 மாவட்டங்களையும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில், 12 மாவட்டங்களில் அதிகமாக வசித்து வரும் பில் சமூகத்தினர், இந்த 24 மாவட்டங்களையும், மகாராஷ்டிரா, குஜராத்தை சேர்த்து மொத்தம் 49 மாவட்டங்களை தனியாக பிரித்து பில் பிரதேசம் என்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் மாநில பழங்குடியினத்துறை அமைச்சர் பாபுலால் தெரிவிக்கையில், ஒரு சாதியின் அடிப்படையில் புதிதாக ஒரு மாநிலத்தை உருவாக்க முடியாது. அப்படி நடந்தால் நாட்டில் உள்ள மற்ற மக்களும் இதுபோன்ற ஒரு கோரிக்கையை முன் வைப்பார்கள்.
இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் மத்திய அரசுக்கு எந்த பரிந்துரையும் செய்யப் போவதில்லை. மேலும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்கள் யாரும் அந்த இட ஒதுக்கட்டின் பலனை பெறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.