உ. பி : ஹத்ராஸ் சம்பவத்திற்கு காரணமான போலே பாபா 'அலட்சிய' அறிக்கை..!!
Bhole Baba Says About Hathras Stampede Tragedy
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் முகல்கடி என்ற கிராமத்தில்,ஒரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மைதானத்தில், போலே பாபா என்று பக்தர்களால் அழைக்கப் படும் நாராயண் சாகர் ஹரி என்பவர் ஜூலை 2ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒரு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தினார்
இந்த கூட்டத்தில் சுமார் 2.5 லட்சம் மக்கள் திரண்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கூடுவார்கள் என்று கூறி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பிய போலே பாபாவிடம் ஆசி வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டு சிக்கி சுமார் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் கிளம்பி விட்டேன். அதனால் அங்கு நடந்தது எனக்கு தெரிய வரவில்லை. சில சமூக விரோதிகள் தான் இந்த நெரிசலை ஏற்படுத்தி இத்தனை பேர் உயிரிழக்க காரணமாகி உள்ளனர். இந்த பிரச்சினையை நான் சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் தனக்காக வாதிட பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஏ. பி. சிங்கை போலே பாபா நியமித்துள்ளார். வழக்கறிஞர் ஏ. பி. சிங் நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bhole Baba Says About Hathras Stampede Tragedy