மணிப்பூரில் வக்ப் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.க, நிர்வாகி வீட்டுக்கு தீ வைப்பு..! - Seithipunal
Seithipunal


வக்ப் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவரின் வீட்டுக்கு, மர்ம கும்பல் தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான வக்ப் வாரிய சட்ட திருத்த சட்டத்தில், பல்வேறு திருத்தங்களை செய்து மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.  இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கடந்த 06-ஆம் தேதி முதல் இந்த திருத்த சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் வக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

அங்கு பா.ஜ.,வின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்கர் அலி, வக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக சில கருத்துகளை சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், தவுபால் மாவட்டம் லிலாங்கில் உள்ள அவரின் வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர். அத்துடன், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட நுாற்றுக் கணக்கானோர் அடங்கிய கும்பல், அஸ்கர் அலியின் வீட்டை சேதப்படுத்தியதுடன், தீ வைத்தும் எரித்துள்ளனர். மேலும், அஸ்கர் அலி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து லிலாங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை சமாளிக்கும் வகையில், அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வக்ப் மசோதாவுக்கு எதிராக மணிப்பூரின் பல பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மணிப்பூர் இம்பால் மாவட்டத்தின் லிலாங்கில், தேசிய நெடுஞ்சாலையில் 5,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதேப்போன்று தவுபாலில் உள்ள இரோங் செசாபாவிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP supports Waqf Bill in Manipur sets fire to administrator house


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->