காற்றழுத்த தாழ்வு பகுதி - டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!!
rain in delta districts
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்துவதும் வானம் மேக மூட்டத்துடனும் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிபில் தெரிவித்து இருப்பதாவது:- "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இது இன்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 11-04-2025 வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.