ராஜீவ் கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தது மத்திய பாஜக அரசு!
Centralgovt filed review petition against rajiv case criminals
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காததால் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதனைஅடிப்படையாகக் கொண்டு தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, முருகன், சாத்தன் உள்ளிட்ட ஆறு பேர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பல வரவேற்பு தெரிவித்தாலும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. பாஜக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மௌனம் காத்து வந்தது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரை விடுதலை செய்தது துரதிஷ்டவசமானது. இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது என தனது அதிருப்தி வெளிபடுத்தி இருந்தார். இதனால் ஆறு பேர் விடுதலையானது தேசிய பிரச்சனையாக மாறியது. பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை தடுக்க மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோன்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி "ஏழு பேரின் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் காங்கிரஸ் தாக்கல் செய்யும்" என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதன் காரணமாக மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இன்றியும் கலந்து ஆலோசிக்காமல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசால் ஆறு நாட்களுக்குப் பிறகு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடி காரணங்களுக்காகவே மத்திய பாஜக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டில் எழுந்துள்ளது.
English Summary
Centralgovt filed review petition against rajiv case criminals