பிரதமர் மோடி தலைமையில் முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை; நாளை அமைச்சரவை கூட்டம்..!
Consultation with the three service chiefs the Defense Minister and key leaders under the chairmanship of Prime Minister Modi
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 22-ந் தேதி பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்.பெறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் கலக்கம் அடைந்துள்ள பாகிஸ்தான், தன் பங்குக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தான் வான்பரப்பையும் மூடுவதாக அறிவித்தது. இதனிடையே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூட்டை நடத்த தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 04-வது நாளான நேற்று முன்தினம் இரவு இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஹனீப் அப்பாசி, இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தினால் போர் வெடிக்கும் என்றும், தங்களிடம் 130 அணு குண்டுகள் உள்ளன. அவை அனைத்தும் இந்தியாவுக்காகத்தான் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய நிலவரங்களை பிரதமரிடம் அவர் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.

பிரதமர் இல்லத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அவரச ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Consultation with the three service chiefs the Defense Minister and key leaders under the chairmanship of Prime Minister Modi