காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு; சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச தீட்சை அளித்து ஆசி வழங்கவுள்ளார்..!
The youngest head of the Kanchi Shankara Math will take charge today
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஆந்திர மாநிலம் துனி நகரை சேர்ந்த, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அட்சய திருதியை தினமான இன்று ( ஏப்.30-ஆம் தேதி) சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்க உள்ளார்.
இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளதாவது; காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் சன்யாச தீட்சைக்கான வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், பஞ்ச கங்கா திருக்குளத்தில், காலை, 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்குகிறார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேஷ பூஜைகள் நடக்கிறது.

காலை 9.00 மணி முதல் 10.00 மணி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கி, ஸ்ரீமடத்தில் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடக்கிறது.
காலை 10.00 மணி முதல் தரிசனம் மற்றும் பூஜைகள் நடக்க உள்ளது. ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து பிருந்தாவன் மண்டபம் மேடைக்கு சுவாமி வருகை தந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் மூலம் பிரசாதங்கள் பெறப்படுகிறது. காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை, பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை சமர்ப்பணம், மாலை 5.00 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும் என காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The youngest head of the Kanchi Shankara Math will take charge today