ஒருமுறை மட்டும் உபயோகிக்ககூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை.! மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஒருமுறை மட்டும் உபயோகிக்ககூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்ததாவது,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மரக்கன்றுகள் நடவும், தூய்மையைப் பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, கடந்த மே மாதம் 29ந் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதோடு, பெருமளவில் மரக்கன்று நடுவதை, அனைத்து குடிமக்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர், பெருந் தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன்படி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும், குப்பை சேகரிக்கப்படும் இடத்திலேயே 100% அளவிற்கு அவற்றை தரம் பிரிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகளையும் மேற்கொள்வது அவசியம். 

தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், குப்பைக்கிடங்குகள் அல்லது நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் குறைக்க வேண்டும். 2,591 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

எஞ்சிய 2,100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளும், இந்த மாதம் 30ந் தேதிக்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதுடன், சிறப்பு நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது, திடீர் சோதனை நடத்துதல் மற்றும் தடை உத்தரவை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகவோ, அல்லது சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலோ, அனைத்து மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்களுக்கு அருகிலுள்ள சிமென்ட் ஆலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி மேயர்கள், வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், சந்தை அமைப்புகள், சுய உதவிக் குழுவினர், மாணவர்கள், இளைஞர் குழுக்களின் பங்கேற்புடன் கூடியதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆவணப்படுத்துவதுடன், உயர்மட்ட அளவில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eliminate of use plastic only once


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->