மத்திய அரசுக்கு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழாதிங்க இபிஎஸ் - தங்கம் தென்னரசு பதிலடி!
DMK Minister Thangam Thennarasu reply to admk EPS
மத்திய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்து உள்ளதாக திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து முதலமைச்சர், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய திரு. பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?
தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Minister Thangam Thennarasu reply to admk EPS