கூகுள் நிறுவனத்தில் மீண்டும் பணிநீக்கம் – இந்திய ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலை!
Google layoffs again uncertainty for Indian employees
தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனம் மீண்டும் பணிநீக்க நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் அடங்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், நிறுவன தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்திய பணியாளர்கள் மட்டுமின்றி, கடந்த வாரம் ஆண்ட்ராய்டு மென்பொருள், பிக்சல் சாதனங்கள், மற்றும் குரோம் வலை உலாவி பிரிவுகளில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கூகுளால் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது இது ஒரு தொடர்ச்சியான மாற்றத்துக்கான தொடக்க கட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே, கூகுள் தனது வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி, செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாமாகவே விலக விரும்பும் ஊழியர்களுக்கு முன்னதாகவே சில சிறப்புத் திட்டங்களை வழங்கி ஊக்குவித்திருந்தது.
கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “நிறுவனம் தற்போது மிகச் சிறந்த முறையில் செயல்படுவதற்காக, வளங்களை திறம்பட பயன்படுத்தும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது,” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது இந்திய ஊழியர்களிடையே பதட்டத்தையும், எதிர்கால நம்பிக்கையையும் பாதிக்கும் நிலையில் உள்ளது.
சந்தை நிலைமை, உலகளாவிய பொருளாதார சவால்கள், மற்றும் தொழில்நுட்ப துறையின் பரிணாம மாற்றங்கள் ஆகியவையும் கூகுளின் இந்த முடிவுகளில் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என வல்லுநர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.
English Summary
Google layoffs again uncertainty for Indian employees