காசர்கோடு : மலைப்பாம்பு விழுங்கிய கோழிகளுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு வழங்கிய கேரள அரசு..!!
Kerala Govt Compensates After 2 Years Chickens Who Devoured by Python
கேரளாவில் மலைப்பாம்பு விழுங்கிய கோழிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேரள அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே. வி. ஜார்ஜ். விவசாயியான இவர் சிறிய அளவில் கோழிப் பண்ணையும் நடத்தி வந்துள்ளார். திடீரென அவரது பண்ணையில் இருந்து கோழிகள் காணாமல் போயுள்ளது. யாரோ திருடுகிறார்கள் என்று ஜார்ஜ் சந்தேகப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஒரு மலைப்பாம்பு வந்து கோழிகளை விழுங்குவதை கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூன் 2022 ல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார், ஜார்ஜ். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டுச் சென்றனர். அப்போது வனத்துறையினர் ஜார்ஜிடம் இது அரசால் பாதுகாக்கப் பட்ட அரியவகை ஊர்வன என்பதால் அரசிடம் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க கூறியுள்ளனர்.
இதையடுத்து ஜார்ஜ் கேரள அரசுக்கு நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஓராண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மாநில அமைச்சர் ஒருவர் நடத்திய விழாவில், இந்த பிரச்சினை குறித்து பேசிய ஜார்ஜ், தன் பண்ணையில் பிடிபட்டது கேரள அரசுடையதாக இருக்கலாம் என்றும், தனக்கு இழப்பீடு வேண்டும் என்றும் பிரச்சினை எழுப்பியுள்ளார்.
ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கேரள மனித உரிமை ஆணையத்தை ஜார்ஜ் அணுகியுள்ளார். இதையடுத்து வனத்துறை ஜார்ஜை அழைத்து, தற்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு மலைப்பாம்பு விழுங்கிய கோழிகளுக்கு ரூ. 2000 இழப்பீடு வழங்கியுள்ளது.
English Summary
Kerala Govt Compensates After 2 Years Chickens Who Devoured by Python