100-க்கு 101 மதிப்பெண் எடுத்த வாலிபர் - அரசுத்தேர்வில் முறைகேடு..!
malpractice in madhyapradesh govt exam
மத்தியபிரதேசம் மாநிலத்தில் வனக்காவலர், களக்காவலர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. அதில் தேர்வு எழுதிய ஒருவருக்கு 100-க்கு 101.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி இந்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "தேர்வு முடிவு அறிவிப்புக்கு பிறகு, தேர்வுக்குழு விதிகளின்படி ஆட்சேர்ப்புத் தேர்வில் 'சாதாரணமயமாக்கல் செயல்முறை' ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவும் பெறலாம் என்று தெரிவித்தார்.
அதிகாரிகளின் இந்த விளக்கத்தை ஏற்கமறுத்த போராட்டக்குழு தலைவர், "ஆள்சேர்ப்பு தேர்வில் பின்பற்றப்பட்ட சாதாரணமயமாக்கல் செயல்முறையின் காரணமாக ஒருவர் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக எடுத்தது மாநில வரலாற்றில் இதுவே முதல் முறை.
நியாயமற்ற செயல்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி முதலமைச்சர் மோகன் பகவத்துக்கு மனு கொடுத்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
malpractice in madhyapradesh govt exam