அமிர்தசரஸ் பொற்கோவிலில் பதற்றம்; பக்தர்களை இரும்புக்கம்பியால் தாக்கிய நபர்; 05 பேர் படுகாயம்..!
Man attacks devotees with iron rod at Amritsar Golden Temple
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா பயணிகளும் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், பொற்கோவில் வளாகத்திற்குள் இன்று இரும்புக்கம்பியுடன் மர்ம நபர் நுழைந்துள்ளார். அவர் அங்கிருந்த பக்தர்கள் மீது திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு தாக்குதல் நடத்திய நபரை அங்கிருந்த பக்தர்கள் சிலர் மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சுல்பான் என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை பொற்கோவில் வளாகத்தில் நாராயண் சிங் சவுரா என்ற நபர் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தார். அதில், சுக்பீர் சிங் பாதல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Man attacks devotees with iron rod at Amritsar Golden Temple