சபரிமலையில் புதிய வழிபாட்டு முறையுடன் பங்குனி மாதத்திற்கான நடை திறப்பு..!
Opening of the path for the month of Panguni in Sabarimala
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று மாலை 05 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறவுள்ளது. 19- ந்தேதி இரவு அன்று அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படவுள்ளது.

சபரி மலையில் பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதனால் பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும், தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வருவதால், நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா சபரிமலை கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டு, 02-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்கப்பட்டு 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.
English Summary
Opening of the path for the month of Panguni in Sabarimala