மோடி அரசால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மைக்கு ஆபத்து; மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்..!
Modi government endangers Indias national security Mallikarjun Kharge criticizes
சீனா, அருணாச்சல பிரதேச எல்லையில் 90 புதிய கிராமங்களை அமைப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'X' தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மோடி அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த குற்றச்சாட்டு மிகுந்த பொறுப்புடன், உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படுகிறது.

அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களை அமைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக, நமது எல்லையில் சீனா இதுபோன்ற 628 கிராமங்களை அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மோடி அரசாங்கம் எல்லையில் 'துடிப்பான கிராமங்கள் திட்டத்தை' ஊக்குவிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
ஆனால் உண்மை என்னவென்றால், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் 90% நிதி கடந்த 2 ஆண்டுகளாக செலவிடப்படவில்லை. இந்தத் திட்டம் பிப்ரவரி 2023-ல் தொடங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடி நிதியில் ரூ.509 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இமாசல பிரதேசத்தில், 75 கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் அதற்கு மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் எந்த நிதியையும் வழங்கவில்லை.
டிசம்பர் 2024-இல், சீனா பிரம்மபுத்திரா நதியின் மீது 'உலகின் மிகப்பெரிய அணை' கட்டுவதாக அறிவித்தது. இது நமது தேசிய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்வடகிழக்கு மாநிலங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்தியாவின் நன்னீர் வளங்களில் 30% பிரம்மபுத்திரா நதியில் உள்ளது. இதன் ஓட்டம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது.

2022-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலின்படி, "மார்ச் 2021-இல் சீனா 14-வது ஐந்தாண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
இது பிரம்மபுத்திரா நதியின் கீழ் பகுதிகளில் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது" என்று கூறப்பட்டது. இதன் பொருள், 2021-ம் ஆண்டிலிருந்தே மோடி அரசு இந்த விஷயத்தைப் பற்றி அறிந்திருந்தது, ஆனால், முற்றிலும் அமைதியாக இருந்தது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை விட, மக்கள் தொடர்புக்கான சாகசங்களும், பொய்யான விளம்பரங்களுமே மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது தெளிவாகியுள்ளது." என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
English Summary
Modi government endangers Indias national security Mallikarjun Kharge criticizes