சூட்கேசில் அண்ணியின் சடலம்; கங்கையில் வீச முயன்ற தாய் மற்றும் மகள்..!
Mother and daughter tried to throw the body they brought in a suitcase into the Ganges
சூட்கேசில் ஒன்றில் பெண்ணின் சடலத்தை மறைத்து எடுத்துவந்து கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மகளை கோல்கட்டா போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவின் குமர்துலி பகுதியில் உள்ள கங்கை நதிக்கரையில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு காரில் வந்திறங்கிய இரு பெண்கள், சூட்கேசுடன் வந்துள்ளனர்.
அந்த சூட்கேஸை குறித்த பெண்களால் இழுத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து யோகா பயிற்சிக்கு வந்த ஒருவர், 'சூட்கேசில் என்ன இருக்கிறது? அதை ஏன் ஆற்றில் வீச செல்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்கள், 'எங்கள் செல்ல நாய் இறந்து விட்டது. அதை ஆற்றில் வீச வந்தோம்' என, தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, ஏராளமானோர் அங்கு திரண்டு அவர்களை மாறி மாறி கேள்வி கேட்டுள்ளனர். இதன்காரணமாக வேறு வழியின்றி அந்த பெண், சூட்கேசில் இருப்பது தனது அண்ணியின் சடலம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரது சடலத்தை ஆற்றில் வீச கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அங்கு திரண்டு இருந்தவர்கள்,போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு பெண்களிடமும், விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த இருவரும் கோல்கட்டா அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரியவந்தது. சூட்கேசில் சடலமாக இருக்கும் பெண், அவர்களது உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Mother and daughter tried to throw the body they brought in a suitcase into the Ganges