வரலாறு பாடத்திட்டத்தில் முகலாயர் பகுதி நீக்கவில்லை..! - NCERT இயக்குனர் விளக்கம்..!!
Mughal section was not removed from history syllabus
வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர் பகுதிகளை நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. வரும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NCERT தயாரித்துள்ள புதிய வரலாறு பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி "பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரித்துள்ள வரலாற்று பாட புத்தகத்திலிருந்து முகலாயர்கள் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பாடப் புத்தகங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு அளித்த பரிந்துரையில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையான பாடங்களை நீக்க கூடாது என்றும் சுமையாக உள்ள பகுதிகளை நீக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதனை நாங்கள் அமல்படுத்துகிறோம். பள்ளிக் கல்விக்கான தேசிய பாட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி செய்யப்படும். தேசிய கல்வி கொள்கைக்கான பாட புத்தகங்கள் வரும் 2024 ஆம் ஆண்டு அச்சிடப்படும். முகலாயர் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதாக கூறுபவர்கள் பாடப் புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தினேஷ் பிரசாந்த் சக்லானி தெரிவித்துள்ளார்
English Summary
Mughal section was not removed from history syllabus