திருப்பதி கோவிலுக்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை பரிசோதனை செய்ய புதிய ஆய்வகம்.!
new lab in tirupathi for test ghee quality
திருப்பதி கோவிலில் தரப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
"திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய உண்மை தெரிய வந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்பட்டது.
லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை. நெய் போன்று தோற்றம் அளிக்கும் ஆனால் அது உண்மையான நெய் இல்லை. அதில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் கலந்து உள்ளன என தெரிவித்தனர். உடனே கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தோம்.
அதன் பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு, மாட்டு இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ஆலிவ் ஆயில் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை பரிசோதனை செய்ய வெளிநாட்டிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வாங்கி சொந்தமாக புதிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் தரமான நெய் மற்றும் பொருட்கள் கொண்டு தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
English Summary
new lab in tirupathi for test ghee quality