போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
Pope Francis passes away India declares 3 days of mourning
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர் அர்ஜென்டினாவை சேர்ந்த வர்.இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாக பதவியில் இருந்து வந்தார்.இந்தநிலையில் அவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.இதனால் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.பின்னர் தனது பெரும்பாலான பணிகளை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். சமீபத்தில் வாடிகனில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு நேற்று காலையில் திடீரென உடல்நிலை மோசம் அடைந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இதற்கிடையே போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன. தொடர்ந்து அவருடைய உருவப்படத்திற்கு பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி கத்தோலிக்க திருச்சபையில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று கூறியுள்ளது
English Summary
Pope Francis passes away India declares 3 days of mourning