PSLV C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்;இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!
PSLV C60 rocket launch
இன்று விண்ணில் ஏவப்படவிருந்த பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றப்பட்டு, அதன்படி, இன்று இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
குறித்த, திடீர் மாற்றம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், அதே சுற்றுவட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருப்பதால் விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவிருக்கிறது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.
இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும்,இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று இஸ்ரோ கூறுகிறது.
தனித்தனியான இரு விண்கலன்களை,விண்வெளியில் சென்று இணைய செய்வதற்கான இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.