வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஆள் அனுப்பும் முயற்சி - பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை.!
raid of stop illegal employees go to foreign
வெளிநாட்டு வேலைக்கு சட்டவிரோதமாக ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழகத்திற்கான குடிபெயர்வோர் பாதுகாவலர், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கூட்டு முயற்சியில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து, சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சட்ட விரோத முகவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் வேலை தேடும் நபர்களை குறிவைத்து இந்த சட்ட விரோத முகவர்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்த முகவர்கள், மிக அதிக அளவுக்கு பணம் பெற்று சில சமயங்களில் விசா மற்றும் பணி நியமன பர்மிட்டுகள் வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் பேசுகையில், "வெளியுறவு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ உரிமம் பெறாமல், எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்தியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடியாது. விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான உரிமம் பெற விரும்பும் முகவர்கள் சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு குடிபெயர்வோர் பாதுகாவலரை 90421 49222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
raid of stop illegal employees go to foreign