வங்காளதேசம் || ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 3 பேர் உயிரிழப்பு.! 20 பேர் மாயம்.!
Refugee boat capsizes in Bangladesh
வங்காளதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கடலில் மூழ்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசத்தில் ரோஹிங்கியா இன மக்கள் தங்கியிருக்கும் அகதிகள் முகாம்களில் உள்ள மோசமான நிலமை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அகதிகள், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தல் காரர்கள் மூலம் தப்பித்து செல்கின்றனர்.
இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் சுமார் 65 பேரை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை ஒரு மீன்பிடி இழுவை படகு மலேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது மோசமான வானிலை காரணமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு காக்ஸ் பஜார் மாவட்ட கடற்கரையில் மூழ்கியது. அளவுக்கு அதிகமான பாரம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய 41 ரோஹிங்கியா அகதிகள் மற்றும் 4 வங்கதேசத்தினர் உட்பட 45 பேர் மீட்கப்பட்டதாகவும், கடலில் மூழ்கிய மூன்று இளம்பெண்களின் உடல்கள் ஹல்பூனியா நகரின் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Refugee boat capsizes in Bangladesh