அலறிய பெண்கள்! விடாத டாக்டர்கள்! மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம்!
surgery carried out without anesthesia in bihar hospitals
பீகார் மாநிலத்தில் அரசு பொது சுகாதார மையத்தில் மயக்க மருந்து கொடுக்காமல் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையங்களில் வார இறுதி நாட்களில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுவது வழக்கம். குளோபல் டெவலப்மென்ட் இனிஷியேடிவ் என்ற தொண்டு நிறுவனம் இந்த குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணியில் இணைந்துள்ளது.
இந்த நிலையில் பீகார் மாநிலம் ககாரியாவில் உள்ள இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த வார இறுதியில் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக 24 கிராம பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இரண்டு சுகாதார மையங்களில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த இரண்டு சுகாதார மையங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள் அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் கூறுகையில் "வலியால் அலறும் போது நான்கு பேர் கை கால்களை பிடித்துக் கொண்டனர். அப்பொழுது மருத்துவர் மயக்க மருந்து செலுத்தாமல் எனக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்தார்" என தெரிவித்துள்ளார். இதேபோன்று மற்றொரு பெண் கூறுகையில் "அறுவை சிகிச்சை முழுவதும் நான் சுயநினையுடன் இருந்தேன். அறுவை சிகிச்சைக்காக கத்தி என் உடல் மீது பயன்படுத்திய போதெல்லாம் நான் கடுமையான வலியால் துடித்தேன்" என புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ துறை அதிகாரிகள் ஒருவர் "புகார் அளித்த பெண்களின் வாக்குமூலத்தை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். பர்பாட்டா சுகாதார மைய பொறுப்பாளர் ராஜீவ் ரஞ்சன் "அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த ஒவ்வொரு பெண்களுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் உடல் அமைப்பு வேறுபடுவதால் சில பெண்களுக்கு அது வேலை செய்யவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டு பீகாரின் ஆராரியா மாவட்டத்தில் 53 கிராம பெண்களுக்கு இரண்டு மணி நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மயக்க மருந்து இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
surgery carried out without anesthesia in bihar hospitals