நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம்..!
The Economic Offences Division court has rejected the bail application of actress Ranya Rao
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை கடந்த 03-ந் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து ரூ.12½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.2.67 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கர்நாடக போலீசில் டி.ஜி.பி. அந்தஸ்து நிலையில் உள்ளவர் ராமசந்திர ராவ், இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ். டி.ஜி.பி.யின் மகள் என்பதால் அவர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது விமான நிலையத்தில் இருந்து வீடு வரை பாதுகாப்புக்கு போலீஸ் கார் மற்றும் காவலர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அத்துடன், டி.ஜி.பி.யின் மகள் என்பதால் அவரை போலீசார் எங்கும் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், ரன்யா ராவ் தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தங்க கடத்தலில் அவருக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் உதவி செய்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ரன்யா ராவிற்கு ஜாமீன் வழங்க விசாரணை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், விசாரணையின் போது ரன்யா ராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில் அதிபர் தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கேட்ட மனுவை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. வழக்கில் கைதான மற்றொரு குற்றவாளி தருணை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
English Summary
The Economic Offences Division court has rejected the bail application of actress Ranya Rao