நாட்டுக்காக ஒரே மகனை இழந்த தேனி விவசாயி.! பஞ்சாபில் அரங்கேறிய கொடூரம்.!
Theni army soldier killed in shooting in Punjab army camp
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 04:35 மணி அளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் பீரங்கிப் பிரிவின் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர்கள் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்த ராணுவ வீரரான யோகேஷ் குமார் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் என்பவரின் ஒரே மகன் ஆவார். மேலும் ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார், தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு, மாலை நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்.
இதைத்தொடர்ந்து, உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படிப்பை முடித்த அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். இதையடுத்து, சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்ததால், அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்தார்.
இந்நிலையில் பெற்றோர், யோகேஷ் குமாருக்கு இந்தாண்டு திருமணம் செய்து வைப்பதற்காக திருமணம் ஏற்பாடுகள் நடந்து வந்தநிலையில், தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும் சொந்த ஊரிலும் நல்ல முறையில் அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்த யோகேஷ்குமாரின் இழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வீர மரணமடைந்த யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து ராணுவ மரியாதையுடன் யோகேஷ்குமாரின் உடல் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
English Summary
Theni army soldier killed in shooting in Punjab army camp