மும்பையில் தலைதூக்கும் தட்டம்மை - பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!
twelve peoples died for Measles in mumbai
மகாராஷ்டிரா மாநிலதில் உள்ள மும்பையில் கடந்த சில நாட்களாக அதிகளவு தட்டம்மை பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை மும்பையில் 233 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 8 மாத ஆண் குழந்தை தட்டம்மையால் உயிரிழந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 20-ந்தேதி உடல் முழுவதும் தட்டம்மை பரவியிருந்தது. இதன் காரணமாக அந்த குழந்தை, சிகிச்சைக்காக மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், சில மணிநேரத்திலேயே அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இருப்பினும் குழந்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே குழந்தை இறந்ததற்கான காரணம் பற்றி முடிவு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால் மும்பையில் மொத்த உயிரிழப்பு 12 ஆக உயர்ந்து உள்ளது.
இதையடுத்து, மும்பையில் கஸ்தூர்பா, சிவாஜி நகர், பாபாசாகேப் அம்பேத்கர், ராஜாவாடி, சதாப்தி, குர்லா பாபா, சாவித்திரி புலே, செவன் ஹில்ஸ் உள்ளிட்ட எட்டு மருத்துவமனைகளில் தட்டம்மை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் இந்த ஆண்டு தட்டம்மை இருப்பதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்ணிக்கை 3,534 ஆக அதிகரித்து உள்ளது. அவர்களில் புதிதாக 156 சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தட்டம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, மும்பை மாநகராட்சி தெரிவித்ததாவது, "காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் ஏ இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு டோஸ் கொடுக்கப்பட்டு அடுத்த 24 மணிநேரத்திற்கு பின்னர் 2-வது டோஸ் கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
twelve peoples died for Measles in mumbai