போதை பொருள் கடத்தல்: இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
US India Drug Traficking
அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
"ஆண்டு அச்சுறுத்தல்கள்" என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையில், ஃபெண்டானில் தயாரிக்க தேவையான முக்கிய ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் மிகுந்தளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மீது இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சில கடத்தல் கும்பல்களுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்குள்ளாகும் இது முதல் முறை.
சமீபகாலமாக, அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு மிகுந்த அளவில் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
ஃபெண்டானில் என்பது அமெரிக்க அரசு அனுமதியுடன் வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்தாக சில அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது.
ஆனால், அதிக அளவில் பயன்படுத்தினால், இது ஒரு ஆபத்தான போதைப் பொருளாக மாறக்கூடியது. இதனால், சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் இதனை போதைப் பொருள் வடிவில் பொடி மற்றும் மாத்திரையாக விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாகவும், சீனாவில் இருந்து ரசாயனங்கள் வாங்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
2023-ல் மட்டும், ஃபெண்டானில் விஷவாதத்தால் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பேரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுக்கு கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.