Freedom Fighters : இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டவர்.. யார் இவர்?!
Freedom Fighter dhadhabai nouraji history
இந்தியாவின் பெருங்கிழவர்:
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவரை பற்றிய சிறிய தொகுப்பு.!
பிறப்பு :
தாதாபாய் நௌரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் நௌரோஜி பலஞ்சி டோர்ஜி, மேனக் பாய் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
கல்வி :
மும்பை எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் தனது படிப்பை முடித்தார். 1850ஆம் ஆண்டு எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
திருமண வாழ்க்கை :
தாதாபாய் நௌரோஜி குல்பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விடுதலை போராட்டத்தில் தாதாபாய் நௌரோஜியின் பங்கு :
1851ஆம் ஆண்டு மக்களுக்கு கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் ஞான் பிரச்சார் மண்டல், அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் ஆகியவற்றை தொடங்கினார்.
1855ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தியக் கம்பனியான காமா ரூ கோவின் பங்குதாரராக லண்டன் சென்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அந்த கம்பெனியைவிட்டு விலகினார். பின்னர் நௌரோஜி ரூ கோ என்ற சொந்தக் கம்பெனி துவக்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
1866ஆம் ஆண்டு கிழக்கிந்திய சங்கத்தை தோற்றுவித்தார். ஆங்கில ஆட்சியில் இந்தியர்கள் படும் துன்பம் குறித்து தன் பேச்சுகள், கட்டுரைகள் மூலமாக இங்கிலாந்து மக்களுக்கு விளக்கினார்.
இந்திய தேசிய சங்கத்தை சுரேந்திரநாத் பானர்ஜியுடன் சேர்ந்து கல்கத்தாவில் ஆரம்பித்தார். ஆலன் ஆக்டேவியன் ஹியூம், உமேஷ்சந்திர பானர்ஜியுடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸை 1885ஆம் ஆண்டு உருவாக்கினார்.
ஒரே குறிக்கோளைக் கொண்டிருந்த இந்திய தேசிய சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக 1892ஆம் ஆண்டு முதல் 1895ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் தலைவர்கள் 1907ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிந்தபோது மிதவாதிகளின் பக்கம் இருந்தார்.
காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870ஆம் ஆண்டு சுட்டிக்காட்டினார்.
'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா" என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தினார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.
தாதாபாய் நௌரோஜியின் மறைவு :
சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நௌரோஜி 92வது வயதில் (1917) மறைந்தார்.
English Summary
Freedom Fighter dhadhabai nouraji history