Freedom Fighters : இதழாளர்.. எழுத்தாளர் மட்டுமல்ல இவர் ஓர் சிறந்த விடுதலை போராட்ட வீரரும் கூட....!!
K Muthaya History
கே.முத்தையா:
விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவரை பற்றிய சிறிய தொகுப்பு..!!
பிறப்பு :
முத்தையா 1918ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் முடப்புளிக்காட்டில் கருப்பையா, வள்ளியம்மை தம்பதிக்கு முதல் மகனாக பிறந்தார்.
கல்வி :
முத்தையா ஆரம்பக் கல்வி முடப்புளிக்காட்டில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பேராவூரணி ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியிலும், பட்டுக்கோட்டை ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் படித்து முடித்தார். இறுதித் தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த இரண்டாவது மாணவனாக திகழ்ந்தார். பின் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பை தொடங்கினார்.
விடுதலை போராட்டத்தில் முத்தையாவின் பங்கு :
முத்தையா 1932ஆம் ஆண்டு பேராவூரணி தேச விடுதலைத் தியாகி வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் மாணவ நண்பர்களுடன் ஈடுபட்டார். அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து அன்னியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார்.
சமூக ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர பேராவூரணி வட்டாரத்தில் '11 நாடுகளின் இளைஞர்கள் சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவரானார் முத்தையா. முத்தையா 1938ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார்.
கம்யூனிஸ்ட் மாணவர் குழு, பல்கலைக்கழக கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளர் பொறுப்பு, ஒருபக்கம் படிப்பு என ஒரே நேரத்தில் கவனித்து வந்தாலும் வகுப்பில் இண்டர்மீடியட் தேர்வில் முதலாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
1943ஆம் ஆண்டில் ஜப்பான் விமானப்படை சென்னை நகரத்தில் வீசிய குண்டினால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து வெள்ளம் சென்னை நகரை சூழ்ந்த நேரத்தில் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு தோணி மூலம் மீட்டு காப்பாற்றினார்.
1946ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ராயல் இந்தியக் கடற்படைக்கு ஆதரவாகச் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் முத்தையா. பின் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1952ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகாலம் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டார். 1963ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார் முத்தையா.
முத்தையா 1963ஆம் ஆண்டு கட்சியின் இதழான 'தீக்கதிர் செய்தி" இதழை நடத்தினார். 1970ஆம் ஆண்டு 'செம்மலர்" என்ற இலக்கிய மாத இதழை தொடங்கி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் முத்தையா. 1963ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையிலும் தனது ஆசிரியர் பொறுப்பைத் திறம்பட செய்தார்.
முத்தையாவின் மறைவு :
60 ஆண்டுகால அரசியல் பணியிலும், 50 ஆண்டுகால இதழாளர் வாழ்விலும், இலக்கியவாதி, மக்கள் போராளி, இதழாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மையோடு வாழ்ந்த கே.முத்தையா 2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் காலமானார்.