திருவிழா... நாட்டுப்புற கலைகளில் ஒயிலாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?
oyilattam in thiruvizha
ஒயிலாட்டம்:
தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.
பொதுவாக இந்த ஆட்டம் கோவில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. ஊர்க்காவல் தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபடும் மாசிக்களரி விழாவிலும், அம்மன் எடுப்பு, கொடை விழாக்களிலும் இது பிரசித்தம். கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியிலும், விநாயகர் கோவில் விழாக்களிலும் இந்த ஆட்டம் இடம் பெறுகிறது.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை ஆகிய தென் மாவட்ட கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் ஆடப்படுகின்றது.
ஒயிலாட்டம் என்றால் என்ன?
ஒயிலாட்டம் என்பது ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும். ஒயில் என்ற சொல்லுக்கு அழகு, ஒய்யாரம், அலங்காரம் எனப் பொருள்படுகிறது. எனவே ஒயிலாட்டம் என்பதற்கு அழகுள்ள ஆட்டம் எனவும் பொருள்படும்.
ஒயிலாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?
ஒரே நிறத்திலான துணியை முண்டாசு போல கட்டிக் கொண்டு காலில் சலங்கை அணிந்து கொண்டு ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடக்கூடிய ஒரு குழுவின் ஆட்டம்தான் ஒயிலாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஒயிலாட்டத்தில் அதற்கென சில இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது. அவை தவில், தப்பு, சிங்கி போன்றவைகள் ஆகும்.
அதேபோன்று தோலால் கட்டப்பட்ட குடம், டோலக் என்று சொல்லக்கூடிய இசைக்கருவிகள் யாவும் ஒயிலாட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒயிலாட்டத்திற்கு இரு வரிசையாக நின்று ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும் இந்த ஆட்டம் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதாகவே சொல்லப்படுகிறது.
ஒரே நிறத்தில் தலைப் பாகையும், ஒரே நிறத்தில் சிறு துண்டு கையில் வைத்து இசைக்கேற்ப அழகாக ஆடுவதே ஒயிலாட்டம் ஆகும்.
ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்துவதால் மகளிர் ஆடுவதில்லை.
குழுவாக ஆடுபவர்கள் சிவப்பு துணியை பயன்படுத்தினால், தலைமையாளர் பச்சை துணியை பயன்படுத்துவார். வெள்ளை வேட்டி தார் பாய்ச்சி கட்டியிருப்பார்கள்.
இராமாயணக் கதைகள், பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை, சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணக் கதை போன்றவற்றை பாடலாகப் பாடி ஆடுவார்கள்.
ஒயிலாட்டம் முறைகள் :
தொடக்கத்தில் கைகூப்பி, ஒரு காலை தட்டி, கடவுள் வணக்கம் செய்து தரையை தொட்டு வணங்கி அடவு பிடித்து ஆடத்தொடங்குவார்கள். இடையிடையே இளைப்பாற அண்ணாவி விசிலடித்து நிறுத்துவார். பெரும்பாலும் பாடும் வாத்தியாரேதான் அண்ணாவியாக இருப்பார். கடைசியில் அண்ணாவி நன்றி கூறி பாடுவார். அனைவரும் பூமியைத் தொட்டு வணங்குவர்.
ஆட்டத்தின் வேகம் தக்கு, காலம் எனப்படும். ஆட்டத்தின் அடவு வேகம் அடி, சாரி, தட்டு எனப்படும். தக்கு என்பது மெதுவான ஆட்டத்துக்கு இலக்கணம். வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர்.