எல்லாமே சதி!!! ஜெகதீப் தன்கரின் பேச்சுக்குப் பின்னால் பா.ஜ.க அரசு இருக்கிறது...!!! - செல்வப் பெருந்தகை
Everything conspiracy Behind Jagadeep Dhankars speech BJP government Selva Perunthakai
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் 'செல்வப்பெருந்தகை' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"கடந்த காலங்களில் வேந்தராகும் உரிமை ஆளுநருக்கு இருந்தது. அந்த உரிமையை பறித்து தமிழக முதல்வரை வேந்தராக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தை அச்சறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜெகதீப் தன்கரின் பேச்சுக்கு பின்னாலே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர முடிகிறது. சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது, நீதி கிடைத்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டப்படி தான் குடியரசு தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது.எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு வன்மையாக கண்டிக்கிறது, எச்சரிக்கிறது.
நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Everything conspiracy Behind Jagadeep Dhankars speech BJP government Selva Perunthakai