800 பயணிகள் உயிரிழப்பு!...ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் - முத்தரசன்! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (11.10.2024) இரவு சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதி விரைவு ரெயில், கவரப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் (கூட்ஸ்) மீது மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்ற தகவல் கிடைத்த போதிலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதைகளில் தடம் மாற்றி விடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ரெயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து பொதுத் துறையான ரெயில்வே துறைக்கு தனி வரவு - செலவு தாக்கல் (பட்ஜெட்) செய்து வந்த முறையை மாற்றி, பொது வரவு - செலவு திட்டத்தில் சேர்த்து விட்டது. இதனால் அதன் மீது தனித்த கவனம் செலுத்தும் வாய்ப்பை பறித்து விட்டது. பா.ஜ.க. அரசின் ரெயில்வே துறை மந்திரி விபத்துகள் குறைந்து வருவதாக கூறுவதை, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 விபத்துக்களில் சுமார் 800 பயணிகள் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள விபரத்தை தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மறுக்கிறது.

ஒரே முறையில் இயக்கப்படும் ரெயில்களை விரைவு வண்டி, அதிவிரைவு வண்டி, சிறப்பு வண்டி என பல பெயர்களிலும், தட்கல், பிரீமியம் என்ற பெயர்களிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதும், முன்பதிவு பயணச்சீட்டுகளை ரத்து செய்வதிலும், நடைமேடை கட்டணங்களிலும் பயணிகள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பயண பாதுகாப்பு உட்பட அனைத்து சேவை வழங்குவதிலும் படுமோசமான நிலையே நீடிக்கிறது.

இந்த நிலையில் ரெயில்வே சேவையை தனியாரிடம் வழங்கி, அரசு விலகிக் கொள்ள முயற்சிப்பது மக்கள் விரோத செயலாகும். ரெயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசும், ரெயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

800 passageiros perderam a vida train central government continue negligenciar a segurança do transporte ferroviario mutharasan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->