இதெல்லாம் அபத்தத்தின் உச்சம்! அலட்சியம், சட்டத்திற்கு புறம்பான வழி! திமுக அரசு நேர்மையானதாக இல்லை! ஆதவ் அர்ஜுனா அதிரடி டிவிட்!
Aadhav Arjuna condemn to DMk Govt
விசிக-விலிருந்து வெளியேறியவரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு எந்தளவிற்கு அலட்சியப் போக்குடனும், சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலும் செயற்பட்டு வருகிறது என்பதைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தின் மூலம் அறியலாம்.
'ஒரு மாணவி தைரியமாக முன்வந்து தனக்கு நடந்ததை புகாரளிக்கும்போது காவல்துறை பதிவு செய்த FIR பொது வெளியில் பரப்பப்பட்டதற்கு யார் பொறுப்பு?, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் குற்றவாளி ஒருவர்தான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?, காவல் ஆணையர் தன்போக்கில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வழக்கின் விவரங்களைப் பகிரலாமா?' போன்ற நீதிமன்றத்தின் கேள்விகள் ஒரு பாலியல் குற்றத்திற்குரிய அனைத்து சட்ட வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு மீறியதை வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. அந்தப் பெண் தைரியமாகப் புகாரளித்த பிறகே அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படி மோசமான குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகிறதோ என்கிற சந்தேகம் நமக்கு எழுகிறது.இந்த சம்பவத்தை மறைக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களைப் பரப்புவது, அவர் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது போன்ற அருவெறுப்பான, கேடுகெட்ட, முட்டாள்தனமான செயலாகவே கருத வேண்டியுள்ளது. திமுக-வின் பொறுப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ‘அந்த பெண் தேர்வு செய்த ஆண் நண்பர் சரியானவரா?’ என்கிற ரீதியில் பழமைவாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் கருத்துக்களை பேசியது அபத்தமானது.பெண்கள் சுதந்திரமாகப் பல சாதனைகளைப் படைத்து வரும் நிலையில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல்லும் கட்சியின் நபர்கள் இவ்வாறு பேசுவது அபத்தத்தின் உச்சம். அவர்கள் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானால்?' நூலைப் படிப்பது அவசியம்.
நாங்கள் வழக்கை 48 மணிநேரத்தில் முடித்துவிட்டோம் என்று பேட்டிக் கொடுத்துவரும் காவல்துறை அரசியல் அதிகார வர்கத்தின் அழுத்தத்திற்கு பணிந்து செயல்படும் நிலைமை இனியும் தொடரக்கூடாது. தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே பிரச்சனையை மூடிமறைக்கவும், தன் விளம்பரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வழக்கைச் சரிக்கட்டவும் முயல்கிறதே தவிர, நியாயமான விசாரணை மேற்கொண்டு உரிய நீதியையும் தீர்வையும் அடைய முயலவில்லை. இறுதியாக, நீதித்துறை வந்து தீர்வை எட்ட வேண்டியுள்ளது. காலம் காலமாகப் பெண்ணின் உடலை வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ள பண்பாட்டு அடக்குமுறையின் தொடர்ச்சியாக இன்று தொடரும் பிரச்சாரங்களுக்கு நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்தது அறச்சீற்றத்தின் வெளிப்பாடே.
அரசின் போக்கைக் கண்டித்து அதன் தவறுகளுக்காக மாணவிக்கு உரிய இழப்பீட்டை வழங்க தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அரசின் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள், மாணவர்கள், நேர்மையாக இந்த செய்தியை மக்கள்மன்றத்திற்கு கொண்டு சென்ற ஊடகத்துறையினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கத்தக்கது .
தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்துவரும் சம்பவங்களைப் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரித்து அதனைக் கண்காணிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது.'நீதிமன்றம் தலையிட்டுத்தான் விவகாரங்களைத் தீர்க்குமா?' என்ற நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய அச்சம் எழுந்துள்ளது.
ஒரு பெண்ணை அடையாள சிதைப்பு செய்வதால் சாதித்துவிடலாம் என்று நினைக்கும் ஆதிக்கத்தின் சிந்தனை புதிய தலைமுறையின் சிந்தனையால் அடித்து வீழ்த்தப்படும். இதனால், துயருறப்போவது அந்தப் பெண் அல்ல, அவரை சிதைக்க நினைத்தவர்களே என்பதை விரைவில் உணர்வார்கள்.. அப்போது, பாதிக்கப்பட்டவரை சக தோழியாக, சகோதரியாக ஏந்தி சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்.
குற்றம் நடைபெறாத வண்ணம் மக்களை காக்கும் அரசு சிறந்த அரசு. ஏதேனும் குற்றம் நடந்தாலும் அந்த குற்றத்தின் காரணிகளை வெளிப்படைத்தன்மையுடன் அணுகும் அரசே நேர்மையான அரசு. இன்றைய நிலையில் தமிழக அரசின் செயல்பாடு சிறந்த அரசாகவும் இல்லை… நேர்மையான அரசாகவும் இல்லை என்பதுதான் வேதனை! #யார்_அந்த_SIR" என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
English Summary
Aadhav Arjuna condemn to DMk Govt