''மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத எதேச்சதிகார அரசு;''ஆதவ் அர்ஜுனா..!
Adhav Arjuna says rulers who do not respect womens safety
பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால், கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை, நம் மகளிருக்கு, இந்த மகளிர் தின பரிசாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.என்றும்,தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள, தமிழக வெற்றி கழகத்தினரை விடுவிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துவரும் அராஜக சீண்டல்கள், பாலியல் வன்முறைகள், பாதுகாப்பற்ற சூழல் போன்ற குற்றங்களைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகம் முழுவதும் அடையாள அறவழிப் போராட்டத்தை நடத்தினர் நமது கழக மகளிரணி தோழர்கள்.

மகளிர் பாதுகாப்பை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசியலமைப்பு கொடுத்த ஜனநாயக உரிமையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்ட கழக மகளிரையும், செயற்பாட்டாளர்களையும் கைது செய்திருக்கிறார்கள். இதனை, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் விமர்சனக் குரலைச் சகித்துக்கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார போக்காகவே கருத வேண்டியுள்ளது.
அரசின் காவல்துறை பெண்கள் உட்பட தமது குடிமக்களைப் பாதுகாக்க உள்ளதா? அல்லது அதற்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க உள்ளதா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. பிரச்சனைகளைப் பேசி யாரும் எதிர்க்குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, அந்த சுறுசுறுப்பை சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை.

பெண்கள் உரிமையைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினால் கைது செய்வேன் என்ற அச்சுறுத்தலை நம் மகளிருக்கு இந்த மகளிர் தின பரிசாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
இத்தகைய ஜனநாயக விரோத அணுமுகுறையில் ஈடுபடும் அரசுக்கு எமது வன்மையான கண்டனங்கள். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட மகளிரணி தோழர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Adhav Arjuna says rulers who do not respect womens safety