தொட்டுப் பார், சீண்டிப்பார்.. வீடியோ ரெடியா? CM ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!
ADMK edappally panichamy condemn to DMK government MK Stalin neet
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ள அறிக்கையில், பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.
இதனை திரு. ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
கவுண்டமணி ஒரு நகைச்சுவையில் இலையில் செங்கலை வைத்துவிட்டு "சோத்துல கல்லு இருக்கு" என்பார். அதுபோலத் தான் இருக்கின்றன திரு. @mkstalin கொண்டுவரும் தீர்மானங்கள்!
இந்த திரு. கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை!
இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?
எஜமான விசுவாசம் தடுக்கிறதா திரு. @mkstalin அவர்களே?
கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா?
"மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும்" என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?
கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள்,
ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து , ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா?
2009-14 UPA கூட்டணி ஆட்சியில், முதுகைக் காட்டினால் கூட கையெழுத்து போடும் அளவிற்கு காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே?
இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை மந்திரி என விவாதித்துக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்?
2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்த போதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் எஜமானரான காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்?
அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே!
இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே?
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அஇஅதிமுக பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும் அரசினர் தனித் தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம்!
(பி.கு. : அமைச்சர் நேருவுக்காக "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா? எப்போது ரிலீஸ்? சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் வெளியிட வேண்டுமென திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.) என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK edappally panichamy condemn to DMK government MK Stalin neet